Tuesday, May 10, 2011

Super Subordinate

ஒரு படத்தில் வரும் காட்சி.

விவேக்கும் சூர்யாவும் இருப்பார்கள். விவேக்கிடம் ஒரு பெரியவர் (நாசரோ அல்லது விஜய்குமாரோ சரியா ஞாபகம் இல்லை – அதுவா முக்கியம்? மேட்டருக்கு வருவோம்) கேப்பார் – “அந்த மூட்டை வந்திடுச்சான்னு பாருபா” - என்று.

உடனே நம்ம வைகைப்புயல் ஃபோன் போட்டு விசாரிச்சிட்டு “வந்தாச்சி” - என்பார்.

“எத்தனை மூட்டை?” - மறுபடியும் கேள்வி வரும். மறுபடியும் ஃபோன் போட்டு கேட்டு விட்டு அப்புறம் பதில் சொல்வார்.

“என்ன என்ன வந்ததாம்?” கேள்வி மீண்டும்.

“எத்தனை கேள்வி??? நல்லா கேக்கிறாய்ங்கப்பா கொஸ்ட்டினு…ஒட்டுக்கா கேக்க வேண்டியது தானே..” புலம்பலுடன் மறுபடியும் ஃபோன்.. இப்படியே தொடரும்.

அடுத்து ஹீரோவிடம் பெருசு அதே கேள்வி கேக்கும். வந்து இறங்கிய மூட்டைகள் எத்தனை? எங்கிருந்து வந்தவை? என்னென்ன இருந்தது? யார் கொண்டு வந்தா? எங்கே வச்சாக? இப்பொ என்ன பன்றாய்ங்க? என்று தகவல் கொட்டி விட்டுப் போவார்.

இதை ஒரு முதலாளி - தொழிலாளின்னு பாக்காமெ ஒரு Manager Subordinate இப்படி யோசிங்க. இப்படிப்பட்ட ஒரு Subordinate கெடைச்சா எப்படி இருக்கும் ஒரு மேனேஜருக்கு?

நமக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்குமா?

நமக்ககு கெடச்ச ஆளுங்க, வச்சிட்டு வாடான்னா, கொளுத்தி வச்சிட்டு வராத ஆளா இருந்தா சரி தான்.

நாட்டுலெ நடக்கிற காட்சி பாத்தோம். ஒரு காட்டுலெ நடக்கிற kaaட்சியைப் பாக்கலாமா…??

வாசல்லே எதோ சத்தம் கேட்டு வெளியே வர்ராரு ஒரு நம்பர் டூ. காட்டான் ஒருத்தன் நிக்கிறான்.

"யாருப்பா நீ? சும்மா கூவிகினு கீறெ?? சொல்லுபா…"

காட்டான் சொன்ன பதில்:

“நானு வேடன்.. ஆனா Boat ஓட்டுறேன் இப்பொ.. உங்களைப் பாத்து ஒரு வணக்கம் வச்சிட்டு போலாம்னு வந்தேங்க..ஒரு நாய் மாதிரிங்க நானு…”

அந்த காட்டான் சொன்னதை ஒட்டுக் கேட்டு நான் அப்படியே சொன்னேன். அம்புட்டு தான்.

ஆனா அந்த நம்பர் டூ வீட்டுக்குள்ளார போய் நம்பர் ஒண் கிட்டெ சொன்னது என்ன தெரியுமா? (ஒட்டுக் கேக்கிறதுன்னு முடிவு செஞ்சாச்சி.. அதை பாதியிலெ உடுவானேன்.??. முழுக்கவே செய்யலாமே.. காதை தீட்டி கேட்ட சமாச்சாரம்..சும்மா உங்களுக்கு சொல்றதுக்குத் தான்.)

“வந்திருக்கிறவன் ரொம்ம்ம்ப நல்லவன்.. தூய்மையான உள்ளம் கொண்டவன்
தாயைக் காட்டிலும் நல்லவன்.பெரிய ஷிப்பிங்க் கம்பெனி ஓனர்.. நெறைய்ய கப்பல் வச்சிருக்கான். அவன் பேரு இதான் (கொஞ்சம் சஸ்பென்ஸ்க்காக மறைச்சிருக்கேன்). பெரிய கும்பலோட வந்திருக்கான். அதிலெ அவய்ங்க சொந்தக்காரங்க எல்லாம் நெறைய்ய கீறாங்க.. அந்த ஆளு உங்களைப் பாக்க வந்திருக்காரு..”

யாருப்பா இப்பேர்பட்ட அதிகப் பிரசங்கி நம்பர் டூன்னு பாக்கீகளா?

நம்பர் டூ : இலட்சுமணன்
நம்பர் ஒன் : இராமன்.
காட்டான் : குகன்.

இந்த லட்சுமணன் மாதிரி ஒரு நல்ல Subordinate கெடைச்சா எப்படி இருக்கும்?? ஆஃபீஸ் அல்லது குடும்பம் எவ்வளவு நல்லா இருக்கும்.

சரி… அந்த கொடுப்பினை தான் இல்லை.. அட்லீஸ்ட் நாம ஒரு நல்ல Subordinate ஆ இருந்து காட்டலாமே..வீட்டில் நல்ல பேராவது கிடைக்குமே!!

இன்று உங்களை தொந்திரவு செய்ய இரு பாடல்கள்:

குகன் சொன்னது இது:

கூவாமுன்னம் இளையோன் குறுகி நீ
யாவான் யார் என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின் கழல் சேவிக்க வெந்தனென்
நவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான்.

இலக்குவன் கேட்டு சொன்னது இதோ:

நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ நின்னைக் காணக் குறுகினான் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும் உள்ளம் தூயவந்தாயின் நல்லான்
என்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறைகுகன் ஒருவன் என்றான்.

மீண்டும் வருவேன்.. (பயம்மா இருக்கா??)

Sunday, May 8, 2011

ABC of Communication

தமிழ் இலக்கியங்களில் மேனேஜ்மெண்ட் கருத்துக்கள் இருப்பதாய் அடிக்கடி இணையங்களில் தகவல்கள் வரும். இதனை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது சமீபத்தில் பரமக்குடி சென்ற போது கிடைத்த தீபாவளி மலர்கள் மற்றும் இதர நூல்கள் வாயிலாக. (ஆனந்தவிகடன், கல்கி, சக்திவிகடன், தினமணி செம்மொழி மலர் இப்படி). தீபாவளி மலர்களை பொங்கல் கழித்தும் பொறுப்பாய் வைத்து எனக்கு அளித்தவர் எனதுமாமா தான். (என்னை முதல் வகுப்பு முதல் பி இ வரை படிக்க வைத்ததோடு நில்லாமல் இப்படியும் இன்றும் என்னை படிக்க வைக்கிறார்).

புத்தகங்களின் மொத்த எடை ஏழு எட்டு கிலோவை நெருங்க இல்லாள் முனக ஆரம்பித்து விட்டார். எதை எதையோ தொலைத்து விட்டு வரும் இந்த மனிதர் இந்த புத்தக மூட்டையை தொலைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வேண்டுதல் வேறு. வேறு ஒன்றுமில்லை அந்த எடைக்கு வெங்காயம் தக்காளி என்று விமானத்தில் ஏற்றி வரலாமே என்ற நல்ல பொருளாதார சிந்தனை தான்.

திணமனி செம்மொழி மலரில் படித்த சேதியினை உங்கள் முன் வைக்கிறேன். கம்பராமாயணத்தில் வரும் மேனேஜ்மென்ட் கருத்துகள் பற்றி ஒரு சின்ன சாம்பிள். டேல் கார்னகி என்ற மேலாண்மை குரு சொன்ன விஷயத்தை கம்பர் பயன்படுத்துகிறாராம். Always communicate Authenticity , in Brevity, with Clarity என்பது தான் காரனகியின் சூத்திரம்.

கம்பராமாயணம் போலாமா?

இடம்: இலங்கை சென்று அனுமன் திரும்பிய நேரம்
சூழல்: வருத்தமாய் இருக்கும் ராமனுக்கு சேதி சொல்ல வேண்டிய தருணம்.
ABC Technique அனுமன் வழியாய் கம்பன் வழங்குகிறார்.

அனுமன் சொன்னதாய் கம்பன் சொல்வது:

கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்”

“கண்டனென்” - சீதை உயிரோடு இருக்கிறாளா? என்ற சந்தேகத்திற்கு விடையாக Authenticity யோடு சொன்ன முதல் வார்த்தை அது.

கற்போடு இருக்க வேண்டும் என்ற ராமனின் ஆசைக்கு பதிலாய் அடுத்த வார்த்தைகள் “கற்பினுக்கு அணியை” Brevity ரத்தினச் சுருக்கமாய்.

நச்சென்று கண்களால் பார்த்த Oral witness என்று Clarity யில் கலக்குகிறார் கம்பர்.

இது எப்படி இருக்கு?.

என்னக்காவது இந்த மேலாண்மை தத்துவம் மாதிரி பொன்டாட்டியிடம் பேசி பேச்சு வாங்காமல் தப்பிக்க முயற்சி செய்த்துண்டா? இனி முயற்சி செய்யிங்க..[ தகவல் உதவி : கம்பன் அடிசூடி பழ பழனியப்பன். நன்றிகளுடன்]

அழகிய தமிழ் மகள்

என்ன தான் கலைஞர் மாதிரி ஆட்கள் தமிழன் பெயரை எவ்வளவோ மேலே கொண்டுவந்தாலும் இந்த வட நாட்டவர்களுக்கு தமிழர்கள் என்றால் கொஞ்சம் இளக்காரம் தான். அதுவும் ஹிந்தி சினிமாக்களில் காட்டப்படும் தமிழன் எப்போதும் காமெடியன் தான். ஐயோ, ஐயோடா, ஐயய்யோ இவைகள் தான் தமிழன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று வடிவேல் ஸ்டைலில் கேக்க மட்டும் தான்முடியும்!!!

அந்தமானில் 15 - 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்கள் ஐயாலோக் என்று கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் பெரும்பாலும் கூலித் தொழிளார்களாக மட்டுமே இருந்தனர். இப்போது இந்த அய்யாலோக் என்பது மாறிவிட்டது. ஏனென்றால் பல துறைகளில் தமிழர்கள் மேலே வந்துவிட்டனர். அரசியல், வியாபாரம், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இப்படி எல்லா துறைகளிலும் தமிழர்கள் டாப்பில் வரத்துவங்க… அந்த ஐயா லோக் மறைந்து விட்டது.

ஒவ்வொரு மெயிலிலும் இலக்கிய காலத்தை கொஞ்சம் புரட்டிப் பாக்குறேன்… இப்பவே நம்ம மக்களுக்கு தமிழ் மெயில் எழுதுறது ரொம்ப சிரமமா இருக்கு. ஏடு எழுத்தாணி வைச்சி எப்பிடி அந்தக் காலத்திலெ எழுதி இருப்பாங்க? என் கவலை என்னென்னா?? Ctr Z, Ctr C, Ctr V போன்ற வசதி இல்லாம எப்படி எழுதி இருப்பாங்க…??

இந்தக் கவலை ஒருபக்கம் இருக்கட்டும். கவியரசர் கம்பன் கனவு கண்டமாதிரி ஒரு சின்ன கற்பனை அடுத்த பாராவில்.

ராமாயணம் எழுதுறப்பொ கொஞ்சம் அசதியா படுக்கிறார் நம்ம கம்பர். கனவு வருகிறது. அழகிய பெண் ஒருத்தி கெஞ்சியபடி : “காப்பியம் எழுதுறீங்களாம்லெ.. என்னையும் சேத்துக்கோங்களேன்.. ப்ளீஸ்”.

கம்பன் : யார் நீ?
அழகி: தெரியவில்லையா? நானும் தமிழின் மகள் தான்.
கம்பன்: அழகிய தமிழ் மகளே!!! உன் பெயர்?
அழகி: “ஐயோ”
கம்பன்: ஏன் இந்த பயம்? பயப்படாமல் சொல். உன் பெயர்??
அழகி: கவியரசரே… என் பெயர் தான் “ஐயோ”.. தமிழின் புதல்வி நான். என்னை யாரும் எந்தப் புலவரும் பாடுவதில்லை. உங்கள் இதிகாசத்திலாவது என் பெயர் வரட்டும்…ப்ளீஸ்..

தூக்கம் கலைந்து உடனே எழுத்தாணி பிடிக்க… கவிதை கனவில் வந்த அழகிய தமிழ் மகளையும் சேர்த்து வருகிறது. ஐயோ என்ற அமங்கலச் சொல் கம்பன் கைபட்டு மங்கலமாய் இராமனை வர்ணிக்கும் விதமாய் மிளிர்கிறது.

பாடல் இதோ…
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ
இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்.

இனி மேல் வட நாட்டவர் யாராவது ஐயோன்னு தமிழனை அவமரியாதை செய்தால் உங்களுக்கு இராமனை நினைக்கும் வாய்ப்பு அளித்ததாய் சந்தோஷப்படுங்கள்.

இடையிடையே இடை

இடைவளி விடாமல் போஸ்ட் செய்த காரணத்தால் கொஞ்சம் இடைவெளி விட்டு ஜாலியா ஏதாவது ஒரு விஷயத்தை பத்தி எழுதலாம்னு நெனெச்சப்போ... சரி இடை பத்தியே எழுதலாம்னு தோணிச்சி..

நடக்கும் நடை பாத்து அதில் அத்தனை அசைவுகளா? என்று பிரமிப்பில் நடையா? இது நடையா? ஒரு நாடகமே நடக்குதேன்னு வியக்கிறார் ஒரு கவிஞர். அட.. ஒரு நாடகத்தில எல்லா அம்சங்களும் இருக்கும்.. பாசம் நேசம் காதல் கடமை நகைச்சுவை சோகம் இப்படி எவ்வளவோ இருக்கும். இதல்லாமா ஒரு நடையில் தெரியுது!!!

இனிமேல் எங்காவது நடையை பாத்தால் நீங்களும் இதெல்லாம் தெரியுதான்னு பாருங்க… நாம இப்பொ கொஞ்சம் நடை மேட்டரை தள்ளி வச்சிட்டு இடை மேட்டருக்கு பீடு நடை போடுவோம்..

அதே பாடலில்

இடையா அது இடையா அது இல்லாதது போல் இருக்குது..ன்னும் வருது. இடையும் கடவுளும் ஒன்னு மாதிரியா? இருக்கா இல்லையான்னு சந்தேகப் பட வைக்குதாம்…. ஒரு கவிஞர் இன்னும் கொஞசம் ஓவரா போயி பிரம்மனை பிடிச்சு கன்னா பின்னான்னு திட்டுறார்… ஏம்ப்பா..இவ்வளவு கஞ்சனா கீறியேன்னு… இடை படைக்கிறப்போ பிரம்மனே கஞ்சனாயிட்டதா அந்தக் கவிஞனின் குற்றச்சாட்டு.

பிரம்மன் சிர்ச்சிட்டே பதில் சொல்றார்.. அடேய்.. கொஞ்சம் மேலே பாருப்பா… கவிஞர் லேசா மேலே பாத்துட்டு, அசட்டு சிரிப்புடன் ஹி..ஹி… "நீ வள்ளல் தான் பிரம்மனே" என்கிறார்.

துடியிடை என்று தான் செல்லமா எல்லாருமே இடை பத்திய கற்பனையோட இருக்காங்க. ஆனா அது கொஞ்சம் மாறிப்போக மனுஷன் நொந்து போகிறான்.

ஒரு சங்கதி தெரியுமா.. ஆண்களின் சராசரி கையின் நீளமும், பெண்களின் இடுப்பின் சராசரி சுற்றளவின் பாதியும் ஒன்னா இருக்காம். இதிலிருந்து என்ன தெரியுது?? இடையின் ப(ய)ன்பாடு.

நம்மா டி ராஜேந்தர் தான் ஒரு படத்தில் இடை வேளையின் காட்டும் போது ஒரு இடையின் படம் போட்டு வேளை என்பதையும் சேத்திருந்தார்.

இலக்கியத்தை வச்சி முடிக்காட்டி நமக்குத்தான் தூக்கம் வராதே!!! கம்பன் கற்பனை இடைபத்தி எப்படி இருக்குன்னு பாக்கலாமா? அவர் ஹீரோயின் சீதை தான். பாக்கிறார். இடை பொய்தானா என்ற கேள்வி வருது. அதையே அப்படியே உட்ராரு தன்னோட பாட்டுல.. “…பொய்யோ எனும் இடையாளொடும்…”

இனிமேல் இடைமேலும் ஒரு பார்வை இருக்கட்டும். ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.. விடு ஜுட்.

பாகப்பிரிவினை

பழங்கதை:

அது 1986. ஈ மெயில், ஆன்லைன் டிக்கெட்டிங் இல்லாத காலம். டிக்கெட்டுக்காய் ஒரு தந்தி வந்தது. அந்தமானுக்கு வர கப்பல் டிக்கெட் உறுதியாகி விட்டது என்று. சென்னை அலுவலகம் வந்தேன். உடனே தம்பு செட்டி தெருவில் போய் டிக்கெட் வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள்..

தெருப்பெயர் வித்தியாசமாய்ப் பட்டது. ஏன் இந்தப் பெயர் வந்தது???

அரதப் பழங்கதை:

ஒரு காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தார்களாம். சொத்துத் தகறாறில் (பெரிய தகராறு என்பதால் ர , ற ஆகிவிட்டது) வீட்டை ரெண்டாக்கி விட்டார்களாம். எல்லாம் பிரித்தாகி விட்டது. ஒரு செம்பு மட்டும் தான் மிச்சம்

விஜய் ஒரு படத்தில் வக்கீலுக்கு அசிஸ்டென்டாக இருந்து இருவரை பஞ்சாயத்து செய்து அனுப்புவார். அவர்கள் போகும்போது வரப்பு நீயே வச்சிக்க..இல்லெ நீயே வச்சிக்க என்று தோளில் கை போட்டு போவார்கள்.

இப்படித்தான் தம்பிமார்கள் இருவரும் செம்பை விட்டுக் கொடுத்தனர். ஆனால் மகளிரணி அந்த செம்பை விடுவதாய் இல்லை. (கணவன்மாரின் நெத்தி பாத்து அடிக்க தேவையாய் இருந்திருக்குமோ!!!)

செம்பை விற்கவும் அவர்கள் தயாராக இல்லை. இறுதியில் ஆளுக்குப் பாதியாய் செம்பையும் வெட்டி எடுத்துக் கொண்டார்களாம்.

இது ஊர் முழுதும் பரவிவிட செம்பு வெட்டியவர்கள் உள்ள தெரு என்று முதலில் பேசப்பட, பின்னர் செம்பு வெட்டி தெரு என்றாகி இப்போது தம்பு செட்டி தெரு என்றாகி ஜாதி பெயர் நீக்கி இன்று தம்பு தெரு என்று பல் இளிக்கிறது.

ஆதாரம் - கம்பன் நேற்று இன்று நாளை By சிகி சிவம்.

சங்ககாலம்:

நிலம், இடம் இதுக்கே இவ்வளவு சண்டை பிடிக்கும் இந்தக் காலத்தில்.. ஆட்சியையே அப்படியே தூக்கிக் கொடுக்க... அதையும் வாங்காமெ... இல்லை..நீயே வச்சிக்க.. எனக்கு வேண்டாம் என்று சொல்வது சொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்.

கம்பராமாயணத்தில்

"அரசு நின்னதே ஆள்க"
இது இராமன் பரதனைப் பாத்து சொன்னது.

"சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்
மன்னன் ஆதி; என்சொல்லை மறாது என்றான்"

இது பரதன் சத்ருகனிடம் சொன்னது. நீ அரசை வசிக்கப்பான்னு.

"யானாம் இவ்வரசை ஆள்வேன்"
இந்தக் கதை இங்கே வேண்டாம் பரதண்ணா... என்னை ஆளைவிடு என்று அவரும் கலண்டுக்கிறார்.

சகோதரபாசம் இப்படி இருக்கனும் என்று கம்பன் எதிர் பாக்கிறார்.

சரி.. இதெல்லாம் இப்பொ சாத்தியமா??

யாரது?? யாரது??? யாரது????

யாரது?? யாரது??? யாரது???? என்று விஜய் காவலன் படத்தில் அப்பாவியாய் பாடுவது கொஞ்சம் சிரிப்பாத் தான் இருக்கு..

என்னதான் காவலாய் கத்தினாலும் கூட, அந்த... பழைய முகம் காட்டாமல்... பாட்டெல்லாம் பாடி காதலித்த "ஹலோ மை டியர் ராங்க் நம்பர்" பாட்டும், "நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்.." பாட்டும் தேவையில்லாமல் ஞாபகம் வந்து தொலைக்குதே..??

இதே மாதிரி யாரதுன்னு யார் யார் தேடினாங்கன்னு ஒரு அலசல் அலசலாமா??

யார் யார் யார் அவர் தானோ!!
ஊர் பேர் தான் தெரியாதோ... ன்னு இப்பொ கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல் அது.

"யாருக்கு மாப்பிள்ளை யாரோ.. அவர் எங்கே ஒளிந்திருக்கிறாரோ" என்றும் ஒரு பாடல் புது மாப்பிள்ளையைத் தேடுகிறது.

பாடலை விட்டு விட்டு ஒரு வெற்றி பெற்றவர் யாரதுன்னு மிஸ்டர் ஜேம்ஸ் வில்ட் கிட்டெ கேட்டா அந்த மனுஷன் ஒரு ஃபார்முலா தருகிறார்.

நல்ல எண்ணம் + முறையான விடாமுயிற்ச்சி + தொடர்ச்சியான கடின உழைப்பு = வெற்றி

ஓ.. இது தான் சக்சஸ் ஃபார்முலாங்கிறதா??

யாரது - ன்னு கேட்டு ஒரு யுத்தத்தில் ஜெயித்த கதை தெரியுமா??

இந்தியாவுக்கு படை எடுத்து வந்த பாபர், ஒரு நாள் தன்னோட படை பட்டாளத்துக்கு லீவு வுட்டு கங்கை கரையில் தங்கினார்.

அக்கரையில் இரண்டு இடங்களில் புகை வந்து கொண்டிருந்தது.

யாரது - அக்கரையில்? அக்கரையொடு கேட்டார் பாபர்.

இக்கரையிலிருந்து வந்த பதில்: உங்களோட சண்டெ போட சண்டேலா மன்னன் வந்திருக்கான். சைவம் & அசைவம் தனித்தனியே சமையல் வேலை நடக்குது.

பாபர் சொன்னாராம்... சாப்பாட்டிலேயே ஒண்ணா இல்லையா!!! அப்பொ வெற்றி நமக்கே...

உண்மையில் நடந்ததும் அதானே...

கம்பராமாயணத்தில் ஓரிடம் யாரது - ன்னு கேள்வி கேட்டு வருது.

ராமனின் வருங்கால மாமனார் கேட்கும் கேள்விதான் இது. இடம் மிதிலை.

கூட்டி வந்த முனிவர்.. நல்லவரு .. வல்லவருன்னு சொல்றமதிரி வரும் பாட்டு. பாட்டு மட்டும் பாருங்க... அர்த்தம் புரிஞ்ச்சா சரி.. புரியலையா... அங்கவை சங்கவையொடு பழகுங்க...தன்னாலே புரியும்.

"இருந்த குலக்குமரர் தமை இரு கண்ணும்
முகந்து அழகு பருக நோக்கி
அருந்தவனை அடி வணங்கி யார் இவர்கள்
உரைத்திடுமின் அடிகள் என்ன
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி
காணிய வந்தார் வில்லும் காண்பார்
பெருந்தகைமைத தயரதன் தன் புதல்வர் என
அவர் தகைமை பேசலுற்றார்"


இனி மேல் காவலன் படத்தின் "யாரது" பாட்டு கேட்டா உங்களுக்கு மேலே உள்ள ஏதாவது ஞாபகம் வரனும்... ஒன்னுமில்லையா... என் ஞாபகமாது வரணும்.

வரட்டுமா???

இடைத்தரகர்கள்

அன்பு நெஞ்சங்களே…

தரகர்களின் தேவை எதுக்கு?

ஒரு சேவை தேவைப்படும் நபருக்கும் அது வழங்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்பவர்கள் தான் தரகர்கள். அவர்கள் இடையில் இருப்பதால் இடைத்தரகர்கள். அம்புட்டுத்தான்.

விளைவிக்கும் விவசாயிக்கு 50 ரூபாய் கிடைக்கும். ஆனால் மார்க்கெட்டில் ரூ 300க்கு அந்த பொருள் விற்கும். அப்பொ 250 ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள் அந்த இடைத்தரகர்கள்.

புரோக்கர், மாமா, பூஜாரி, Lobbiest, Facilitator, Contractor, Mediator இப்படி செய்யும் தொழில் வைத்து பெயர்களும் மாறுபடும்.

இந்த நீனா ராடியா போன்ற இடைதரகர்கள் அந்தக் காலத்திலும் இருந்திருப்பாங்களா?... யோசிச்சிகிட்டே கொஞ்சம் கப்பல் ஏறுவோம்.

போர்ட்பிளையர் முதல் லிட்டில் அந்தமான் வரை கப்பல் பயணம். சுமார் 9 மணி நேர பயணம். ஜாலியா படிக்க ரெண்டு பெரிய்ய புக் எடுத்துட்டு கிட்டுக் கிளம்பினேன். ரெண்டு பெட் இருக்கும் கேபினில் இன்னொருவர் வந்து சேர்ந்தார். இங்கிருக்கும் ஒரு மிருக வைத்தியர் (கன்சூமர் கோர்ட், கம்ப்ளைண்ட் என்று ஏதும் செய்யாத மிருகங்களுக்கு வைத்தியம் செய்வதில் சுகம் என்றார்)..

ரொம்ப போரில்லை.. 9 மணி நேரம் … அவரின் கேள்வி.

அப்படி ஒன்னுமில்லை… நான் புக் வச்சிருக்கேன். – இது நான்.

என்ன புக்கு அது..இவ்வளவு பெரிஸ்ஸ்சா? (கேட்டவர் மலையாளி மிருக வைத்தியர்)

கம்ப ராமாயணம். பாடல்கள் மட்டும் ஒரு புக்.. அர்த்தம் தெரிய இன்னொரு புக் என்றேன்.

டாக்டர் ஒரு மாதிரி பாத்தார்… இதெல்லாம் சுத்தமா ஒரு எடத்திலெ இருந்து தானே படிப்பாங்க. இப்படி ஜாலியா படிக்கிற புக்கா இந்த ராமயணம்??

அவருக்கு நான் சொல்லிய பதில் தான் உங்கள் முன் சொல்ல வருகிறேன்..

ஜாலியான சமாச்சாரங்கள் நிறைய இருக்கு இந்த கம்ப ராமாயணத்தில். இடைத்தரகர்கள் இல்லை என்றால் ராமன் இல்லை. ராமன் இல்லையெனில் ராமாயணம் ஏது??

தசரதனுக்கு குழந்தையே இல்லை. என்ன செய்றதுன்னு கைனக்காலஜிஸ்ட்களிடம் பேசினார். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இந்த டெஸ்ட் செய்யின்னு சொல்ற மாதிரி ஒரு யாகம் செய்யனும்னு ஒரு சின்னதா பிரஸ்கிரிப்ஷன்.

நம்ம டாக்டர்கள் தெரிஞ்ச லேபில் ரெக்கமண்ட் பண்ற மாதிரி, ஒரு வில்லங்கமான முனிவரை வச்சி யாகம் செய்யனும்னு வம்பில் மாட்டி விட்டார்.

அந்த முனியோ சொஞ்சம் அப்படி இப்படி ஆளு.. ஆனா அவரோட அப்பாவோ, மக்களை விலங்கு மாதிரி நெனைக்கிற ஆசாமி..பயங்கர முனி..இந்த நேரத்லெ தான் நம்ம ராஜாவுக்கு (தசரதனுக்கு) ஓர் இடைத்தரகர் தேவைப்பட்டார்.

அது ஸ்பெட்ரம் மேட்டரை விட கொஞ்சம் பெரிய்ய மேட்டர் என்கிறதினாலெ ஒரு குரூப்பையே பிடிச்சாரு நம்ம தசரதன். யாரு அந்த இடைத்தரகர்கள் தெரியுமா… ஸ்…ஸ்.. யார்கிட்டேயும் சொல்லாதீங்க.. கொஞ்சும் பெண்கள் சிலர்.

அவங்க எப்படி இருந்தாங்க தெரியுமா??

பிரைட்டான நெத்தி…
கருப்பா நீளமா கண்ணுங்க…
ரத்தச் சிவப்பா லிப்ஸ் இருக்கும் வாய்..
முத்துப் பல்லுக்காரிகள்..
மென்மையான இரு மார்புகள்..
இப்படியெல்லாம் இருக்கும் விலைமகளிர்…

இவங்களை அனுப்பி கலைக்கோட்டு முனிவனை கலக்கி கூட்டிவந்து யாகம் நடத்தி … ராமன் பிறந்து… இப்படி வந்தது ராமாயணம்…

டாக்டர் தூங்க ஆரம்பிச்சிட்டார்… நீங்க இன்னும் தூங்கலையா??
பாட்டு கேட்டு தூங்குங்க…

“சோதி நுதல் கரு நெடுங் கண் துவர் இதழ் வாய்
தரள நகை துணை மென் கொங்கை
மாதர் எழுந்து யாம் ஏகி அருந்தவனைக்
கொணர்ந்தும் என வணக்கம் செய்தார்.”


என்ன மக்களே… இது தப்பு இல்லையா??

இல்லவே இல்லை… நாலு பேத்துக்கு நல்லது நடக்கனும்னா எதுவுமே தப்பில்லை.

நீங்க என்ன சொல்றீங்க???

ஊமையன் அடிச்ச சரக்கு

நண்பர்களே...

அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கும் வாசகம் இது. "அது அவன் பேசலை.. அவனுக்கு உள்ளே போன சரக்கு பேசுது...". அப்பொ சரக்குக்கும் வாய் உண்டா பேசுறதுக்கு??

நாம நிதானமா ஏதாவது பேசும் போது அதன் பின் விளைவுகள் ஏதும் இருக்குமான்னு யோசிச்சி பேசுவோம்...

சில நேரம் சில பின் விளைவுகள் வருவதற்காகவும் பேசுவோம்.. போட்டுக் கொடுக்கும் வேலைகள்..

மேடைப் பேச்சாளர்கள் நீண்ட நேரம் பேச இந்த சரக்கு ஏத்திட்டு பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்... நேரில் பார்த்தும் இருக்கிறேன்.

முழுமையான ஈடுபாடு, பேசும் பொருளின் ஆளுமை, நல்ல ஒத்திகை இவைகள் எல்லாம் தராத ஒரு தைரியத்தை ஒரு ரெண்டு பெக் சரக்கு தரும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

மக்களின் ரியாக்சன் தெரியாது பேச வேண்டுமா?? சரக்கு அடிச்சிட்டு பேசலாம்..

பேச பயமா இருக்கா...சரக்கடிச்சா... அந்த பயம் போகும் (எங்கே போகும்???..அந்த பயம் இருப்பது தெரியாமல் போகும்...ஆனா...மீண்டும் வரும்).

ஆக மொத்தம் சரக்கு ஏத்திட்டுப் பேசினால் உண்மைகள் தான் வரும் அல்லது உண்மை விளம்பிகளாக மாறி விடுவார்கள்.

அது சரி நம்ம சரக்குக்கு வருவோம்..

பேசுறவன்.. சரக்கு அடிக்கலாம்...உண்மை பேசலாம்... இதை ஒரு வகையில் நாட்டு நடப்பென்று ஒத்துக்கலாம்.

ஊமையன் சரக்கு அடித்தால்...

(சுத்தி வளைச்சி ஏதோ இலக்கியம் சொல்லனும்..அவ்வளவு தானே... சொல்லுப்பா...)

ஆமாம்....

மறுபடியும் கம்பன். கோசலை நாட்டை வர்ணிக்க இயலும் போது தான் இப்படி ஊமையன் சரக்கடிச்ச மாதிரி, எப்படி சொல்றதுன்னு தெரியலையேப்பான்னு சொல்றார்..

ஆனா ஒரு சின்ன வித்தியாசம்...

நம்மாளுக பட்டை முதல் பாரின் சரக்கு வரை அடிப்பானுங்க..

நம்ம கம்பன் அடிச்சது என்ன சரக்கு தெரியுமா??
கள்ளு.. ஆமா...கள்ளு தான்..
அன்பு என்னும் கள்...

...
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்

(நாட்டுப்படலம் - பாடல் எண் -33; கோசல நாட்டு வளம்)

நாமளும் அந்த அன்பு எனும் கள் தினமும் பருகலாமே???

இதுக்கு முன்னாடி இப்படி...

அன்பு நெஞ்சங்களே...

இப்போதைக்கு பாப்புலரா பேசப்படும் 2ஜி யில் அடிக்கடி ராசய்யா சொல்லும் பதில் “இதுக்கு முன்னாடியும் இப்படி பல முறை நடந்திருக்கு..” என்பது தான்.

பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் தான் "இப்படி ஏற்கெனவே செய்திருக்கிறார்களா??" என்று கேட்டு முடிவு எடுப்பார்கள்..

நேத்து டி வி யில் பாத்த "தமிழ்படம்" கிளைமாக்ஸ் காட்சியிலும் கூட கதாநாயகனை விடுதலை செய்ய, பல்வேறு படங்களை உதாரணம் காட்டி ஜட்ஜ் பேசுவார்.

ஜோக்காய் சொன்னாலும் உண்மையில் நடப்பதும் அது தானே !!!

இதுக்கு விதி விலக்கும் உண்டு.

திரு டி என் சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாய் சேர்ந்த புதிது. ஒரு ரூல் புத்தகம் அவசரமாய் தேவைப்பட்ட்து. 35 ரூபாய் தான். வாங்குங்கள் என்றாராம். அதுக்கு அமைச்சக அனுமதி பெற வேண்டும் என்றார்களாம். ஏன் என்று கேட்க, “இதுக்கு முன்னாடி இப்படி தான்…” என்றார்களாம் அதிகாரிகள்.

ஏன் இப்படி நமக்கு Old Reference கேட்கும் புத்தி வந்திருக்கு??
அது… நம்ம.. ரத்தத்திலேயே ஊறினது… மாறவே மாறாது..

அந்தக் கால கவர்மெண்ட் கதை ஒன்னு சொல்றேன்.

அட்வைசர் சொல்றார். ஒரு வேலையை செய்யலாம்னு.. ஆஃபீசருக்கோ கொஞ்சம் தயக்கம். பின்னாடி ஏதும் சி பி ஐ அது இதுன்னு சிக்கல் வருமோன்னு.

அட்வைசர் : கவலைப்படாதீங்க சார்.. இதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கு…

அதிகாரி: அந்த டீடைல்ஸ் குடுங்க பாக்கலாம்..

பாத்தார் ஒகே என்றார். Done.

அந்த அதிகாரி யார் தெரியுமா? இராமன்.

அட்வைசர் : விசுவாமித்திரர்.

இடம்: தாடகை வதம் நடைபெறும் காடு.

தயக்கம்: பெண்ணைக் கொல்லலாமா??

இப்படி முன்னாடி நடந்ததாக முனிவர் கொடுக்கும் இரண்டு முன் உதாரணங்கள்: கியாதி & முகதி என்ற இரண்டு பெண் அரக்கிகளை திருமாலும் இந்திரனுமே இதுக்கு முன்னாடி சாவடிச்சிருக்காங்களே…

(கம்பராமாயணம் : பாடல் 381 & 382)


நீதி: நல்ல முன் உதாரணங்கள் தரும் அட்வைசர்களை கூடவே வைத்திருந்தால் எதுவுமே எப்பவுமே தப்பா வராது.

ஆணியே புடுங்க வேணாம்...

நண்பர்களே…

சில வார்த்தைகளும் வாக்கியங்களும் சர்வ சாதாரணமா நாம யூஸ் பன்றோம். ஆனா அதோட மீனிங்கே வேறெ ஏதாவதா இருக்கும்.

கிளாஸ்லே அந்த வாத்தி அறுத்துத் தள்ளுதுன்னு எத்தனை பேரை நாம சொல்லி இருக்கோம்?. அறுத்தலுக்கும் வகுப்பு எடுக்கிறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என்ன ??

மதுரையில் சமீப காலமாய் புழங்கும் வாசகம் “சான்ஸ்ஸே இல்லை” என்பது. ரொம்பவும் சூப்பரா இருந்தா இப்படி சொல்கிறார்களாம். என் நண்பர் கார்த்திக் பாபு நாலு வருஷமா அமெரிக்காவில் இருந்தும் இந்த தொடர் அவரை விடவில்லை.. (கல்யாணம் ஆகியும் திருந்தாத / மண் மணம் கெடாத ஒருவர்)

தினத்தந்தியில் “சம்பவ” இடத்திற்கு போலீஸ் வந்தது என்று போடுவர். சம்பவம் என்றால் கொலை கொள்ளை கற்பழிப்பு துர்மரணம் விபத்து இப்படி எல்லாம் சேர்ந்தது. அபூர்வ சகோதர்கள் படத்திற்குப் பிறகு சம்பவம் என்றால் “கொலை” என்றாகி விட்டது.

சுவாமி வடிவேலானந்தா வின் சமீபத்திய அருள் வாக்கு என்ன தெரியுமா?? அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஒரு நண்பரை வம்புக்கு இழுத்துட்டு அப்புறம் தொடர்வோம்.

ஒரு நண்பர் நம்ம எல்லாரையும் ஒரு நல்ல பங்க்சனுக்கு இன்வைட் பன்னிட்டாரு. குடும்பத்தோட வரனும்னு ஏகமாய் தொந்திரவு வேறெ…

என் வீட்டுக்காரி நாலு புடவை எடுத்து வச்சி..என்னங்க.. இதிலெ நல்ல புடவையா சொல்லுங்க.. நீங்க சொல்ற சாய்ஸ் தான் என்னோடது – ன்னு கொஞ்ச்சலாய்.

ஆஹா .. மனைவியிடம் நல்ல பேரு வாங்க ஒரு நல்ல சந்தர்ப்பம்… ரொம்ப சிரமப்பட்டு மூளையை கசக்கி.. நல்ல சேலையை செலெக்ட் செய்தேன்..

மனைவியோ.. என்னங்க இது, இதே கலர் மாதிரி பொடவை தான் ரீயூனியன்லே கட்டிகிட்டு திருமதி ஜெயராம் கிட்டெ பேசி இருக்கேன்.. வேறெ ஏதவது சாய்ஸ் ப்ளீஸ்..

சரி.. ரொம்ப யோசிக்காம, இரண்டாவது புடவை கை காட்டினேன்.

என்னங்க மறுபடியும்…. இதை கட்டிகிட்டா இன்னும் கொஞ்ச குண்டா தெரிவேன்.. இது வேண்டாமே..

அடுத்த தெரிவு.. மூனாவது புடவை…

மறுபடியும் தப்பு பன்னிட்டீங்களே… இதிலெ கொஞ்ச கருப்பு கலர் மிக்ஸ் ஆயிருக்கு பாத்தீகளா??? (எனக்கு சுத்தமா அப்படி ஒன்னும் தெரியலை..) நண்பரண்ணா ஆத்துக்கு அதை கட்டிண்டு போனா நன்னாவா இருக்கும்?

அடுத்து மிச்சம் இருக்கும் நான்காவது புடவை எடுத்து கையில் கொடுத்தேன்.

திருமதி ரொம்ப சந்தோஷம்.. இந்த தடவை உங்க சாய்ஸ் தான் பொடவை கட்டறேன்..

நான் மனசுக்குள் வடிவேலை வேண்டினேன்.... “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்ற அருள் வார்த்தை கிடைத்தது.

ஒரு வேலையையும் செய்யாமெ சும்மா இருக்கச் சொல்லனுமா “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்பதை இனி பயன் அடுத்தலாம் என்று வல்காப்பியன் சொல்லிவிட்டார்.

இதே போல் கொன்னுட்டான்யா என்பதும் சரளமாய் பயன்படுத்தப்படும் வாக்கியங்கள்…

கம்பனுக்கும் இந்த சிச்சுவேஷன் கிடைக்குது…

சீதையை பாத்து ராமன் காதலில் புலம்பும் காட்சி.. நீ எமனா வந்து என்னை கொண்ணுட்டே… மறுபடியும் அல்குல், கண்கள், மார்புகள், புன்னகை இதெல்லாம் வச்சி மறுபடியும் கொல்லனுமா என்ன???

வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ.


உண்மையில் கம்பன் கொண்ணுட்டான்… சான்ஸ்ஸே இல்லை. இந்த ஒரு சம்பவம் ஒன்னு போதும்.. இனி எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்.

இலக்கியத் தேடல் வளரும்…

வரமா சாபமா???

அன்பு நெஞ்சங்களே...

உங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் வரும் போது யாராவது சந்தோஷமாச் சிரிங்கன்னு சொன்னா ... என்ன தோணும்?? என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கேன்னு தோணாதா??

ஆனா வள்ளுவர் மட்டும் எப்படி இடுக்கண் வருங்கால் சிரிங்கன்னாரு??

ஒரு வேளை இந்த LAUGHTER THEREOPHY அது இதுன்னு ஏதாவது அந்தக் காலத்திலேயே நெனைச்சி சொல்லிட்டாரோ!!! இருக்கலாம்.. யார் கண்டது??

எல்லாம் நன்மைக்கேன்னு இருக்கிறது ரொம்ப நல்லது. எது நடந்தாலும் சரி... எதுவுவே நடக்கலைன்னாலும் சரி...எல்லாம் நல்லதுக்குன்னே இருக்கிறது... ரொம்பவும் பக்குவமான நிலை..

சோகத்தின் உச்சியில் இருப்பவர்க்கு தெம்பூட்ட சொல்லப்படும் ஒரு கதை இதோ..(ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்த கதை தானோ??)

காட்டில் ஒரு இளைஞனை சிங்கம் துரத்துகிறது. ஓடினான்.. ஓடினான்... ஒரு பாழுங்கினற்றின் ஓரத்தில் இடறி விழுந்தான்... விழும் போது ஒரு வேர் கையில் கிடைக்க அந்தரத்தில் தொங்கினான். கிணற்றின் கீழ் மதம் பிடித்த யானை... நீ கீழே விழுந்தால்.. ஒரே மிதி என்று பிளிறுகிறது. மேலே சிங்கம்.. மேலே வா.. எனக்கு விருந்து நீ தான் என்று சிலிர்க்கிறது. அந்த நேரத்தில் ஒரு அணில் வேறு அந்த வேரைக் கடித்து வருகிறது...

எல்லாம் ஒரே சாபமான செயல்கள் தான்... எதிர்பாராத விதமாய் ஒரு மரத்து தேன் துளி வந்து அந்த இளைஞனின் உதட்டில் விழுகிறது... வரம் போல்..

அந்த நேரத்திலும் தேனை ரசிக்கச் சொல்லுவது தான் வாழ்வின் ரகசியம்..

கம்பரின் காவியத்திலும் இந்த வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருது.

வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்து கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் குருட்டுத் தந்தை சாபம் தருகிறார். "நீயும் இப்படி மகனை இழந்து துடிப்பாய்" என்று.

இதை கேட்டு தசரதனுக்கு ஒரே குஷி... "எனக்கு குழந்தை பிறக்கப் போவுது" ன்னு "எம் பொண்டாட்டி.. நிஜமாவே ஊருக்குப் போயிட்டா" என்று ஜனகராஜ் குதிப்பது போல் குதித்தாராம் அந்த ராஜா...

சாபம் வரமான கதை எப்படி இருக்கு??

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா??

இந்த சாபம் வரமான தகவலை ராஜா தன்னோட முதல் பொண்டாட்டிக்கே ராமன் காட்டிற்கு போகும் போது தான் சொல்கிறார்.

எல்லாத்தையும் பொண்டாட்டியிடம் கொட்டித் தீர்க்கும் மக்களே... கொஞ்சம் கவனிங்க...

இவ்வளவு படிச்சவங்க அந்த பாட்டையும் கொஞ்சம் படிங்களேன்.. ப்ளீஸ்..

சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்
.

கம்பனின் கலக்கல் இன்னும் வரும்...

அது சரி..... இது வரமா??? சாபமா??

Art of communication

அந்தக் காலத்திலெ, நாங்கள்ல்லாம்..என்றும், அப்பொ எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்றும் கேட்கும் பெருசுகளை ரொம்பவவே பாத்திருப்பீங்க.

எனகக்கும் 50 வயது நெருங்குவதால் அந்தக் கூட்டணியில் நானும் சேந்திட்டேன்.நானும் என் பங்குக்கு ஆரம்பித்தேன்....

அந்தக் காலத்து ஹோலி மாதிரி இலலையே!!

20 வருடங்களுக்கு முன்பு வரை ஹோலி அன்று வீட்டை விட்டு வெளியில் வநதால் முகத்தில் கலரின் சவடு தெரியாமல் வீடுதிரும்ப முடியது. இன்றோ வெள்ளையயும் சுளையுமா சட்டை போட்டடும் ஹோலி அனறு திரிய முடிகிறது.

முன்பெல்லாம் வீட்டிற்கு கும்பல் கும்பலல்களாக வந்து கலர் அடித்து விட்டுப் போவார்கள். இப்போதோ கீழ் போர்சன் ஆள் கூட வரவில்லை.

விசாரித்த போது தான் தெரிந்தது காலம் மாறிய போது யார் யார் வீட்டிற்கு போவது என்ற குழப்பம் காரணமாய் இருப்பது தெரிந்தது. (ஆமா.. நீ ஏன் ஒரு ரவுண்ட் போகலைங்க்கிற கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை.

அரசு வேலைகளிலும் யார் பெரியவர்? யார் யரைப் பாக்க வரனும் இதில் கூட தாமதங்கள் ஆகும்.

இந்த சிக்கல் முழுதும் Decision Making, Art of Communication, Relatioship தொடர்பானவைகள். எல்லத்துக்கும் ஒரு நல்ல தீர்வு சொல்லட்டுமா??

ஒரு சிக்கல் அல்லது பிரச்சினைக்கு முடிவு வேணுமா?

அந்த பிரச்சனையை அலசும் நல்ல ஓர் ஆளைப் பிடிங்க.. அவரோட ரேங்க் அல்லது ஸ்டேட்டஸ் எல்லாம் யோசிகக்கதீங்க.

சடட்டுன்னு அந்த எக்ஸ்பெர்ட் இருக்கும் இடத்துக்கே போங்க..

வேகமா போங்க... விமானதிலும் போலாம்..

எப்படி போனாலும் தனியா போங்க... செல்ஃப் டிரைவிங்க் தான் போகனும்.

இது தான் டிப்ஸ்...

அது சரி... நீ எம் பி ஏ நேத்து பாஸ் பன்னிட்டு இன்னெக்கி சொன்னா நாங்க கேட்டுக்கனுமா?? (சந்தடி சாக்கிலெ நானு MBA பாஸ் பன்ன மேடடர் சொல்லலிட்டேன் பாத்தீகளா??)

சரி.. நான் சொன்னா கேக்காடதீங்க!!

கம்பன் சொன்னா கேப்பீங்களா???

இப்ப வாரன்...

இராவணன் சீதையை கவர வேண்டடும். இதுதான் பிரச்சினை. எக்ஸ்பெர்ட் மாரீசன்.

இராவணன் வான வழியே பறந்து செல்லும் விமமானத்தில் ஏறி, தனியா போனதை கம்பன் சொல்கிறார்.. நாமும் இந்த மாதிரி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துக்களாமே!!

பாட்டு பாருங்க:

வந்த மநதிரிககளோடு மாசு அற மரபின் எண்ணி
சிந்தையில் நினைந்த செயயும் செய்கையன் தெளிவி இலநெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்.



மீண்டும் இன்னொரு கோணத்தில் கம்பரை அடுத்த மெயிலில் பாப்போம்.

ஹிந்தியில் பான்ச் பான்ச்...

அன்பு நெஞ்சங்களே...

ஒரு விஷயம் பத்தி ரெண்டு பேர் ரெண்டு விதமா புரிஞ்சிகிறதை பலதடவை கேட்டிருப்பீங்க...

வடிவேல் காமெடி ஒன்றில் வரும் காட்சி:

ஒருவர்: என்ன எப்படி இருக்கீங்க?
வடிவேல்: ஏதோ வண்டி ஓடுது.
ஒருவர்: வண்டி ஓடுதா???...அப்பொ வாங்கின கடனைக் கொடு
வடிவேல்: வாழ்க்கையைச் சொன்னேனப்பா..

1987 களில் அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போயிடுவேன் என்பேன். கேப்பவர்கள்.. மூ...ன்று நாளான்னு ... பெரு மூச்சு விடுவார்கள்..

அதே போல் இங்கு பேசும் ஹிந்தியினை பூனேயில் பேசிவிட்டேன். அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

ஹிந்தியில் இருக்கும் இலக்கன விதிகளான...

மை வந்தால் ஹு வரவேண்டும்
தும் க்கு ஹோவும்
ஹம் என்று ஆரம்ப்பித்தால் ஹைன் என்று முடிப்பது
இவைகள் எல்லாம் இங்கிருக்கும் உத்திர பிரதேச மக்கள் கூட இங்கே மறந்து விட்டார்கள்.

எனக்கோ பூனேயில் பெருத்த அவமானமாய் பட்டது.

இதை விட நம்பர்களை ஹிந்தியில் சொல்லுவதைப் போன்ற கொடுமையான விஷயம் ஒன்னு கிடையவே கிடையாது. தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும்.

ஆனால் ஹிந்தியில் ஏக் சே லேகர் சௌ தக் மனப்பாடம் செய்தாக வேண்டும்.. மார்க் வாங்க அதை படிக்கலாம். மார்க்கெட்டில் இருக்கும் தமிழ் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்!!

அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்...

15 க்கு பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்
47 க்கு சவுந்தாலீஸ் (சரி தானா??) சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்... இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.

மெயில் டைடில் வந்தாச்சி..முடிச்சிரலாமா..?? அப்படி முடிச்சா கம்பர் ஏமாந்து விடுவாரே.. அவரையும் வம்புக்கு இழுக்கலாம்.

இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக்கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு.

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பத்தி கோசலையிடம் ராமன் சொல்கிறான்.

அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்கிறார். பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்
.

பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது நல்லதாய் தான் படுது.

இனிமே பச்பன் கபி நஹி... பான்ச் பான்ச் தான்..

கம்பன் சொல் விளையாட்டுகள் தொடரும்.

யானை வரும் பின்னே...

நண்பர்களே...

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே இது பழமொழி.

சுனாமி வரும் பின்னே பூகம்பம் வரும்முன்னே இது புது மொழி.

பொங்கலுக்கு முன்பே வரும் போகியை வைத்து விவேக் ஒரு படத்தில் கலக்கு கலக்கென்று கலக்கி இருப்பார். நல்ல சேதி சொன்ன காமெடி அது.

அரசு ஊழியர்களுக்கு போகி எப்பொ தெரியுமா?? ஏதாவது என்கொயரி ஆரம்பிக்கும் போது. அல்லது டிரன்ஸ்பர் ஆர்டர் வருவதாய் தகவல் வரும் போது. எல்லாம் கொளுத்தி துடைத்து விடுவார்கள்.. (மூன்று வருஷமா கிளீனிங் செய்யும் ஆட்களை பாத்திருக்கேன்- டிரன்ஸ்பர் தான் வந்த பாடில்லை)

அந்தமானில் 2004ல் சுனாமி வந்தது. அது இங்கிருந்து 1200 கிமீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்து சென்னை சேர்ந்த்து. தமிழக அமைச்சர் ஒருவர் இங்கே வந்து கட்டி ஏறினார் எல்லாரையும். பொறுப்பில்லாத ஆட்கள்... நீங்கள் ஒரு ஆள் கூட சென்னைக்கு தகவல் தரலையேன்னு..20 நிமிஷம் இருந்திருக்கேன்னு...

2004 ல் வந்திருப்பது சுனாமி என்று நமக்கு தெரியவே ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது. (கமல் ரசிகர்கள் - அன்பே சிவம் படம் பாத்தவர்களுக்கு சுனாமி தெரிந்திருந்தது)

இப்பொ சுனமி வரும் முன்பே தமிழகத்தை காக்க ஏற்பாடுகள் ஆகி விட்டது. அந்தமானில் கடல் மட்டம் எதிர்பாராத வகையில் உயர்ந்தால் சென்னைக்கு தானாக தகவல் தந்து விடும்.

அது சரி... தமிழக மக்களுக்கு எச்சரிக்கை வரும். அந்தமானுக்கு யார் தகவல் தருவார்?? என்று அப்பாவியா கேட்டேன். பதில் இல்லை..

சரி... நமக்கெதுக்கு வம்பு?? நம்ம பாட்டுக்கு கம்பரை பிடிச்சி கலாச்சிக்கிட்டு இருக்கலாம் சுனாமி வரும் வரை.

சுனாமி வந்தால் தானே ஆபத்து.. அது வரும் முன்னேயே அப்படி ஆபத்து ஏதும் வருமா??

டிஎன்கே : சுனாமி விடுங்க. ஒரு சேதி ...அது காதில் விழுமுன் வருத்தம் தருமா?

கம்பர்: தந்ததே.

டிஎன்கே: வேறெ என்ன செய்தது?

கம்பர்: வருத்தம் தந்தது; வாட வைத்தது; திகைக்க வைத்தது; மன துயரம் பெருக வைத்தது; அழ வைத்தது; நிலத்தில் விழ வைத்தது.

டி என்கே: அது எப்படிப்பட்ட சேதி?

கம்பர்: அது சொல் இல்லை... சுடு நெருப்பு.

ராமன் காட்டுக்கு போவனும்கிற சேதியான் நெருப்பு கோசலையின் காதுக்கு சேறும் முன்பே இப்படி எல்லாம் செய்ததாம்..

ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல் குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ.


கம்பனோடு உரையாடல் மீண்டும் வரும்..

என்னெயெ ரொம்ப நல்லவன்னு…

“எவ்வளவு தான் அடிச்சாலும் நீ வாங்கிக்கிறயே.. என்னையெ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்க”- இது ரொம்ப பாப்புலரான வடிவேலுவின் டயலாக்.

பாக்கப்போனா.. யார் நல்லவன்? இப்படி ரொம்ப அடி வாங்குற ஆளு நல்ல ஆளா??

சமீப காலமா வர்ர படங்களிலெ நல்லவனெ விட கெட்டவன் தான் அதிகம் வர்ரான். “கெட்டவன்” என்று பெயர் வைத்தே காட்டி விட்டார்கள்.

"நல்லவன்.. எனக்கு நானே நல்லவன்.. சொல்லிலும் செயலிலும் நல்லவன்.." என்று ஒரு பழைய பாட்டு. சொல்லும் செயலும் ஒண்ணா இருக்கணும்னு சொல்லுது.

ஆனா கார்பரேட் தத்துவம் ஏழே நாளில் சிகப்பழகுக்கு கியாரன்டி தருகிறது. நான் கேக்கிறேன்… இது மட்டும் உண்மைன்னா, உலகத்திலெ கறுப்பர்கள் ஒரு வாரத்தில் காலி ஆயிருக்க மாட்டாங்க்க?? இன வேறு பாடு ஒழிக்க ஒரு வாரம் போதுமே.. ஆனா.. நல்ல வியாபார தத்துவங்கள்..

நம்மளை திருத்த முடியாது.. "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நம்ம நாடே இருக்குது தம்பி"…என்றதும், கலாம் ஐயா தனது அஸ்திரத்தை இளைஞர்களை நோக்கி செலுத்தியதும் தான் இன்று, ஹஜாரே போன்றவர்களின் பின்னால் ஹஜாரேங் லோக் (ஆயிரக்கணக்கான மக்கள்) போகிறார்கள்.

இது இருக்கட்டும்… இராமன் நல்லவனா??

இது என்ன கேள்வி?? அவதார புருஷன் நல்லவனா இல்லாமெ எப்படி இருக்க முடியும்?

ஆபீசில் உயர் அதிகாரிகள் பத்தி இப்படித்தான் பேசுவார்கள்.. அந்தாளுக்கு இந்தாளு பரவாயில்லை. தெரிந்த பேயை விட தெரியாத பிசாசு பரவாயில்லை… இப்படி..

கம்பரும் இராமன் நல்லவன்னு சொல்றதுக்கு இந்த மாதிரி கம்ப்பேர் செய்து சொல்றார்.. பாருங்க..

புகழ் எல்லாருக்கும் இருக்கு.. பில்கேட்ஸுக்கும் இருக்கு. பின் லேடனுக்கும் இருக்கு. ஆனா பொருத்தமான புகழ் இருக்கணுமாம்.

அது யார் கிட்டெ இருக்காம்??

சீதை கிட்டெ இருக்காம்.

அந்த சீதை நிலமகளை விட நல்லவளாம்.

அதோட போச்சா.. இன்னும் ஊர்லெ இருக்கிற எத்தனை மகள்கள்?-ன்னு ஒரு லிஸ்ட் எடுக்கிறார் கம்பன்.

திருமகள் ; கலைமகள்; (கலைமானை வாகனமா வச்சிருக்கிற) மலைமகள் இந்த மூணு மகள்கள் கெடைக்கிறாங்க.

அடுத்த பிட்டைப் போட்றார். சீதை அந்த மூணு பேத்தைக் காட்டிலும் நல்லவள்…
ம்… அப்புறம்…

இவ்வளவு நல்லவளான சீதையின் கண்களை விட நல்லவன் இராமன்.. (அப்படிப் போடு அறுவாளை).

நாம தான் யாரையாவது கலாய்க்கும் போது, அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானேன்னு கேப்போம்.. இராமன் அந்த ரகமோ??

கம்பனுக்கு சொல்லி முடியலை.. இன்னும் சொல்றார். இப்படி நல்லவனா இருக்கிறதினாலே யார் யாரெல்லாம் எப்படி எப்படி எல்லாம் விரும்புறாங்க தெரியுமா??

யார் யார்: படிச்சவங்களும் படிக்காதவங்களும் விரும்புறாங்க்க..
எப்படி எப்படி: சாப்புடற தண்ணி மாதிரியும் (எந்தத் தண்ணி?- நல்ல தண்ணி தாம்ப்பா..), பாதுகாப்பான உசுரு மாதிரியும்

நாமளும் நல்லவனா இருந்தா அந்த பாக்கியம் கெடைக்கும்..

இது ரொம்ப சிம்பிளான பாட்டு மாதிரி தெரியுது… (ஓரளவு கம்பர் பிடிபட ஆரம்பிச்சிட்டாரோ?)

மண்ணினும் நல்லள் மலர்மகள் கலைமகள் கலைஊர்
பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சானகியோ நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பர்..

அட கரண்ட் போச்சே... வடை போச்சு மாதிரி..

மீண்டும் தேடுவோம்...

மகிழ் விற்கும் மகளிர்

இந்தக் கிரிக்கெட் ஆட்டத்தில் சமீபத்திய முக்கியமான பிளேயர்கள் யார் தெரியுமா? சச்சின்? டோனி ??.. இல்லை..இவங்க யாருமே இல்லை.

கைகளில் கலர்கலராயும், நிறைஞ்ச நெஞ்சோடும், குறைந்த ஆடைகளோடும், அனைவரையும் உற்சாகப் படுத்தும் Cheer Girls தான் அவர்கள்.

நான் அவர்களை மகிழ் விற்கும் மகளிர் என்கிறேன். (உற்சாக பாணக் கொண்டாட்டங்களில் Cheers க்கு தமிழில் மகிழ்வோம் என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

அந்த மகளிர் ஆடும் ஆட்டத்திற்கு ஏதும் வரையறை இருக்கா..என்ன? ஒண்ணும் இருக்கிற மாதிரி தெரியல்லை.. கிடையாது.. சும்மா தத்தக்கா புத்தக்கா என்று ஆடுகிறார்கள். (அதுக்கும் டிரைனிங்க் தருவாங்களோ?!!)

சந்தோஷம் வந்தா தலை கீழ் தெரியாம ஆட்றதுங்கிறது அது தானோ? ஆனா தண்ணி அடிச்ச ஆட்களும் நல்ல சங்கதிகளை உளறும் சிச்சுவேஷனும் இருக்கு.

ஓஹோஒஹோ கிக்கு ஏறுதே… என்று ரஜினி படத்தில் ஒரு பாட்டு வரும். அருமையான தத்துவப் பாடல் இது.. என்னமோ கிக்கு ஏத்துற பாட்டா இருக்கு… இது எப்படி தத்துவப் பாடலாகும்?

நடுவில் வரும் வார்த்தைகள் -

கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே- அட
தங்கபஷ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே – இந்த
வாழ்க்கை வாழத்தான் – பிறக்கையில் கையில்
என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல..??

பாத்தா ஏதோ சித்தர்கள் பாட்டு மாதிரி இருக்கு பாருங்க.. ஆனா.. மகிழ்விற்குப் பிறகு பாடும் பாடல் அது..

சரி..எதுக்கு இவ்வளவு பீடிகை…??...அது ஒண்ணுமில்லை

அந்தக் காலத்திலும் இப்படி மகிழ்விற்கும் படியான ஒரு நிகழ்வு கெடைச்சது.. அதான்.. கொஞ்சம்….

என்னடா இழுவை… மிச்சத்தைச் சொல்றா…

வந்தேனே…… சொல்ல வந்தேனே…

ஒரு அரன்மனையில் நடந்த கூத்து இது.

அங்கே எல்லாரும் சந்தோஷக் கடலில் மூழ்கிட்டாங்களாம்.

இன்பம் அப்படியே இதயத்துக்கு போச்சாம்..அப்புறம் ஓவர்ஃப்ளோ ஆகி மயிர்க்கால்கள் வரை வந்திடுச்சாம்.

உடம்போடு அப்புடியே சொர்க்கத்துக்கு போயிட்டாகளாம்.

ராஜா முன்னாடி எப்படி இருக்கனுமோ அப்படி இல்லாமெ இருந்தங்களாம்.

அந்த சரக்கு எப்படி இருந்தது தெரியுமா? (பெப்ஸியோடு விஸ்கி கலந்த மாதிரி) இனிப்பா இருந்ததாம்.

அது சரி அது எந்த அரன்மனை தெரியுமா?

தசரதன் அரசாட்சி செய்யும் அரன்மனையில்.

அடப்பாவமே… இவ்வளவு மோசமாவா மிதந்து கிடந்தாய்ங்க??

ஹலோ… ஹலோ…கொஞ்சம் இருங்க….அவங்க எதுக்கு இப்படி மிதப்பில் இருந்தாக தெரியுமா??

அதான் சரக்கு அடிச்சதுன்னு தெரியுதே… அதான் கிடையாது…

வரும்…வராராது மாதிரி, இங்கே சரக்கு அடிக்கலை....ஆனா...அடிச்ச மாதிரி.

கம்பர் வார்த்தையில் சொன்னா… கள் சாப்பிட்ட மா….திரி..

ஆனா "கள்" என்ன தெரியுமா? தசரதன் வாயிலிருந்து வந்த சொல்.. அது என்ன அப்படி கிக் ஏத்துற சொல்…?

ராமன் அரசனாக முடி சூட இருக்கிறான் என்ற சொல் தான் இந்த மொத்த கூத்துக்கும் காரணமாம். (கம்பர் கூட வாக்கியம் என்று சொல்லாமெ சொல் என்று சொன்னதும் – உச்சம்)

என்னமோ தெரியலை இப்பொல்லாம் கம்பரை கையில ப(பு)டிச்சாலே கிக்காத்தான் இருக்கு.அதே கிக்கோட பாட்டையும் படிச்சிருங்க:

இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும்
முறையில் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்.


மீண்டும் மகிழ்வோமா??

ஹீரோ, ஹீரோ தான்

வில்லன்கள் ஹீரோ ஆகலாம். ஆனா ஹீரோ வில்லன் ஆக முடியாது. அப்படியே ஆனாலும் அது ஆன்டிஹீரோ என்று தான் சொல்ல முடியும்.

ஆனா கமல் மாதிரி சில புண்ணியவான்கள் முயற்சியால், காமெடி நடிகை, ஹீரோயின் ஆன சந்தர்ப்பங்களும் உண்டு. வடிவேல் புலிகேசியாய் வலம் வந்தது … ஹீரோவா காமெடியா?? கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.

இதை அப்படியே விட்டுட்டு ரெண்டு கண்கள் பத்தி கொஞ்சம் பாப்போம்.
கண்கள் இரண்டும் என்றதுமே.. மனசுக்குள்ளாற ஒரு பழைய பாட்டு கண்டிப்பா ஓடியிருக்கனுமே…

அது காதல் கண் பற்றிய பாடல். நான் இப்பொ சொல்ல வரும் கண் கடமைக்கண்.. (காதலோ கடமையோ.. எல்லாம் ஒன்னு தானே..சாரி ரெண்டு கண்ணு தானே?? இதுலெ என்ன பெரிசா வித்தியாசம் வந்திரப் போகுது??)

It varies when you compare with others..

சரி எப்படி கம்பேர் பன்னலாம்?. உங்க மனைவி அல்லது காதலி அல்லது Girl Friend கிட்டே போய் “நீ சிரிச்சா தமன்னா மாதிரி இருக்கே…சிரிக்காட்டியும் கூட ஐஸ்வர்யா மாதிரி தான்” என்று ஐஸ் வைக்கலாம். அதெ விட்டுப்போட்டு எக்கு தப்பா ஒரு வில்லி கூட கம்பேர் பன்னி பேசினா, உங்க கதி அதோ கதி தான்.

அன்னா ஹஜாரே காந்தி மாதிரி உண்ணாவிரதம் இருந்து சாதிச்சார். இப்படிச் சொன்னா ஹஜாரேக்கும் பெருமை. காந்திக்கும் பெருமை.

ராமாயணத்தில் ஒரு சோகமான் இடம்.

இராமன், மனைவி பறிகொடுத்து நிற்கும் பரிதாப நிலை. ராமனை ஏமாத்தி அப்படி செய்ததால் கூடுதல் கடுப்பு வேறெ. அவங்க அப்பாவோட தோழர் ஜடாயுவின் மரணம். இந்த மூணும் சேந்து ராமனை ராத்திரி முழுக்க தூங்கவே விடலையாம். அந்த கண் எப்படி இருந்ததாம்??

நம்மளை கேட்டா Weekend கொண்டாட்டம் கழிச்சி வந்த மாதிரின்னு தான் சொல்ல முடியும். இல்லையா?? ராத்திரி கண்முழிச்சி மிட்நைட் மசலா பாத்த மாதிரி…(இதை தாண்டி நம்மாள யோசிக்க முடியாது..)

கம்பர் உணர்ச்சி வசப்பட்டு அந்த சோகமான ராமனோட கண், லட்சுமணன் கண்ணு மாதிரி இருக்குன்னு சொல்லிட்டாரு.. அப்புறம் அவருக்கு ஞாபகம் வருது..அட்டா… ராமன் ஹீரோவாச்சே… எப்படி லக்குவன் கூட கம்பேர் பன்னிட்டு வம்பிலெ மாட்ட முடியும்??

ஒரு பிட்டு நடுவுலெ சொருகுறார்..

இராமன் ஒரு நாள் முழிச்ச கண்..

இலக்குவன் வனவாசம் வந்த நாள் ஆரம்பிச்சி இன்னெக்கி வரைக்கும் தூங்காத கண்ணு.

ரெண்டும் ஒரே மாதிரி இருக்காம்…

சுகமோ, துக்கமோ ஹீரோவுக்கு தனி மரியாதை தான்.

பாக்கியராஜ் ஒரு படத்தின் கிளைமாக்ஸில் சொல்ற மாதிரி… ஹீரோ ஹீரோ தான்..

பாவம் லட்சுமணன் நாள் கணக்கா கண்விழிச்சி, கடைசியில் ஒரு நாளில் ஹீரோ ராமன் பேர் தட்டி விட்டார்..

ம்…ஹீரோ ஹீரோ தான்.

இதோ கம்பரின் வரிகள்:

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் அவர்கள் சிந்தை
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே.

ஆதாரம்: அடப்பாவிகளா… தூங்காமெ கண் விழிச்சி யோசிச்சி எழுதுறேன்..ஏதோ சுட்ட பழம்ன்னு நெனைச்சீங்களே… ராமன் மேலே சத்தியம்.. சொந்தச் சரக்கு தான் (எந்தச் சரக்கு???).

அந்தமான் அதிகாலை 4 மணிக்கு எழுதியது

உங்களுக்கே இது ஓவரா இல்லெ??

வீட்டு உபயோகப் பொருட்களில் (Consumer durable items) வீட்டிற்கு மிகவும் உபயோகமான ஒரு ஐட்டம் இருக்குன்னா… அது எனக்கு என்னமோ வாஷிங் மிஷின் தான் என்று சொல்ல்லாம்னு தோணும். இருந்தாலும் எந்த வாஷிங் மிஷினும் அவ்வளவு திருப்தியா தொவைக்க மாட்டேங்குதே???. இது என் கவலை.

என் துணையார் கேட்டார்… உங்களுக்கு எந்த மாதிரியான வாஷிங்மிஷின் வேணும்?

நான் என் கனவு வாஷிங்மிஷின் பத்திச் சொன்னேன்.

அழுக்குத் துணிகளை நாம ஒரு பக்கெட்டில் போட்டுகிட்டே வரணும். குறிப்பிட்ட அளவு துணி அங்கே வந்தவுடன், தானே வாஷிங் மிஷின் போய் அந்த அழுக்குத் துணிகளை எடுத்து உள்ளாறெ போட்டுக்கணும்…தானா சோப்பு பவுடர் போட்டுக்கணும்.. ஆட்டோமேட்டிக்கா சத்தமே வராமெ… அழுக்கு இருக்கிற இடமா தேடிப் பிடிச்சி.. நல்லா தொவைச்சி…அப்புறம் சுத்தமா ஈரமில்லாம காயவச்சி… நல்லா சூப்பரா பிரஸ் செய்திட்டு.. நம்ம பீரோவில மடிப்பு கலையாம அடுக்கி வைச்சிரணும்..

இப்படி வீட்டிலெ பொண்டாட்டி செய்ற மாதிரி எல்லாமெ பாத்து பாத்துச் செய்யும் ஒரு ஃபுல் ஆட்டமேட்டிக் வாஷிங்மெஷின் கிடக்குமா??

என் மனையாள் சொன்னார்.. ஏங்க… இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை??

சும்மா… இல்லாததை இருக்கிற மாதிரி யோசிக்கிறதே ஒரு சுகம் தானே!! (நீங்க எல்லாருமே என்னோட போஸ்ட்களை ரசிச்சிப் படிக்கிறீங்க – ன்னு நினைக்கிற மாதிரி)

நூறாவது திருட்டு அடிக்கப் போகும் வடிவேலுக்கு அவர்களின் சிஷ்யப் புள்ளைங்க போஸ்டர் ஒட்டி அமர்க்களம் செய்வது - எதில் சேர்த்தி?? அந்தக் கால ஆனந்த விகடனில் வந்த, சாரி..கொஞ்சம் ஓவர் என்பதின் எக்ஸ்டென்சன் தான் இது என்று சேர்த்துக்கலாமா???.

இதையாவது காமெடின்னு ஒத்துக்கலாம். இந்த பஞ்ச் டயலாக் இருக்கே…அது தான் தாங்க முடியலை…

சுனாமிங்கிற பேரைக் கேட்டாலே துண்டெக் காணாம் துணியைக் காணாம்னு ஓடுற பார்ட்டிங்க நாமெல்லாம். ஆனா அடிக்கிற டயலாக் எப்படி தெரியுமா?? நாங்க.. சுனாமியிலேயே ஸ்விம்மிங்க் பண்றவங்க…

இன்னும் கொஞ்சம் ஓவரா போச்சின்னா… “இன்னுமாடா இந்த ஊரு நம்மளை
நம்பிகிட்டு இருக்குன்னு” - அதுக்கும் ஒரு டயலாக் உட வேண்டியது.

இது நம்ம நாட்டு நடப்பு…

அப்படியே கொஞ்சம் காட்டு நடப்புக்கும் போலாமா??

அங்கே திடீர்னு மாயமான சங்கதி எல்லாம் நடக்குதாம். இதோ அதன் பட்டியல்:

  1. வில்லை வச்சிருந்த வேடர்கள் எல்லாம் முனிவர் ஆயிட்டாங்களாம்!
  2. முனிவர்ன்னா எப்படி? கோபமே வராத முனியாம்!! (இது தேவைதான்)
  3. கெடச்சதயெல்லாம் அடிச்சி சாப்பிட்ட விலங்குகள் பசியே இல்லாமெ திரியுதாம்!!!
  4. அப்படியே பாக்கிற சின்ன விலங்குக்கும், சிரிச்சிகிட்டே ஹாய் சொல்லுதாம் friendly யா..!!!!
  5. (இது தான் டாப்பு..) புலி கிட்டெ பால் குடிக்குதாம்… எவை தெரியுமா? மான் குட்டிகள்..!!!!! (இது எப்படி இருக்கு)

ராமன் புகுந்த காடு (சித்திரக்கூடம்) இப்படி ஆச்சின்னு கம்பர் ஓவரா யோசிச்சி சொல்றார்.

கம்பர் ஓவரா யோசிச்சா காவியம் .. நானு ஓவரா யோசிச்சா..ப்ளாக் போஸ்ட் அம்புட்டுதான்.

இந்த ப்ளாக் எழுத உதவிய கம்பரின் பாடல் இதோ:
………….. ……………. ………………. ……………………………
முழுவில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த
உழுவையின் முலை மான் இளங்கன்றுகள் உண்ட
.

இன்னும் தேடுவேன்..

நிமிந்தாளைக் கட்டிகிட்டு…


சித்தாளைக் கட்டிகிட்டு.. சிங்காரம் பண்ணிகிட்டு என்று ஓர் அந்தக் கால சூப்பர் ஹிட் குத்துப்பாட்டு. இன்று பாடினாலும் அம்பதையும் ஆட வைக்கும் பாட்டு அது. (சந்தடி சாக்கில் நம்ம வயசு குத்து மதிப்பா வந்திடுதே!!)

சித்தாள் என்பது சின்ன ஆள் என்பதின் மருவாக இருக்கலாம். அதுக்கு எதிர் அணி ஆள் நிமிந்தாள் … அதாவது நிமிர்ந்த ஆள்..உயரமான ஆள்…ஆண் தொழிலாளி. என்ன தான் சட்டம் சொன்னாலும், சம்பள வித்தியாசம் இருக்கத்தான் செய்யுது.. சின்ன ஆள் என்றால் என்ன மட்டமா???

கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு என்பார்கள்…

ஆனால் நம் மக்களோ… மேக்கப் பாத்தே ஏமார்ந்து போகும் ரகம்.. அப்பொவே உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றும் சொல்லி வைத்தார் வள்ளுவர்.

நல்ல லட்சமனா ஒரு பெண் வந்திருக்கா… பாத்த ஆளு..இது என்ன குதிரை மூஞ்சி.. என்று விரட்டி விட்டார். அது அப்புறம் பாம்பே வரை ஓடி ஹேமமாலினி ஆகி திரைஉலகையே கலக்கியது சரித்திரம். பாக்பான் என்ற படத்தில் அமிதாபின் இணையாக வாழ்ந்தே காட்டிய முகம் அது..

இந்த தப்பை நாம ஏன் செய்யனும்னு நெனெச்ச டி ஆர், ஒரு நடிகைக்கு ஓகே சொல்லி அந்த முகம் இன்னும் சீரியல் வரை வெளுத்து வாங்குது.

சரி..அமிதாப் மட்டும் என்னவாம்.. உயரம் அதிகம் என்று விரட்டி விடப்பட்டவர் தானே! அப்புறம் … லம்பு என்ற ஹிந்தி வார்த்தை, அமிதாப் வருகைக்குப் பின் லம்பூஜி என்று மரியாதையுடன் சேர்த்து பேசப்படுது.

லம்பூ என்று அமிதாப்பை வெளியே தள்ளிய அதே டைரக்டர் ஒரு தடவை கால்சீட்டுக்காய் அமிதாப்பின் வீட்டு வாசலில் நிற்க வைத்தது தான் கால விளையாட்டு.

ஆனால் குள்ளமாய் இருப்பவர்களை கொஞ்சம் அதிகமாவே கிண்டல் பண்றோம்… குட்டையனை நம்பக்கூடாது என்ற விதி நியூட்டனின் நாலாம் விதி போல் சொல்லப்படுது.

அது சரி நியூட்டனின் ஐந்தாம் விதி என்ன தெரியுமா?? அமைதியா சாந்தமா இருக்கிறவனை நம்பக்கூடாது.. (அடப் பாவிகளா..அதுக்காக நான் ஏதாவது அலம்பல் பண்ணிட்டே இருக்கனுமா என்ன??)

என்னைக் கேட்டால் குள்ளமாய் இருப்பவர்கள் அறிவாளிகளாய் இருப்பர். காரணம் பெரிசா ஒண்ணும் கெடையாது. அவர்கள் எப்போதும் முதல் ரோ பெஞ்சில் இருப்பாங்க… கவிதை எழுதுறது, வாத்தி எத்தனை தடவை ஸோ சொல்றாருன்னு எண்றது, ராக்கெட் விட்றது, படம் வரையறது, பெஞ்சில் சிற்பம் செதுக்குறது அதெல்லாம் அவர்களால் முடியாது.. (உயரமா இருந்து பல கலைகள் செஞ்சது இப்பொ உங்களை மெயில் எழுதி கலாய்க்க உதவுது..)

திரைப்பட இயக்குனர் கஜேந்திரன் குள்ளமான உருவம். ஆனால் உயர்ந்த சிந்தனை உள்ளவர்.. சினிமாவில் குள்ளமானதை வைத்து பார்த்திபன், செமையா கிண்டல் செய்து கொண்டிருப்பார்…

ஏன் இப்படி நாமெள்ளாம் ஒரே மாதிரி கிண்டல் செய்றோம்??

யாருப்பா அது.. பின்னாடி… சொல்லாம கொள்ளாம தோள்லெ கை போட்றது??

அட… நம்ம கம்பர்..??

என்ன ஒரு மாதிரி சிரிக்கிறீங்க…!! நீங்களும் ஏதாவது கிண்டல் செஞ்ச்சிருக்கீங்களா - ன்னு கேட்டேன்..

ஒரு பாட்டை கொடுத்துட்டு உன் பாடு உன் குரூப் பாடு என்று அப்படியே நைஸா நழுவிட்டார்..

கம்பர் கொடுத்த பாட்டில் ஓர் அபூர்வ சகோதரர்கள் பாணியில் இருவர் சந்திக்கும் காட்சி வருது.

ஒருவர்: அகத்தியர் (அதே குள்ளமுனியே தான்).

மற்றொருவர் : இராமன்.

பார்த்திபன் கஜேந்திரனை கலாய்கும் போது, எல்லாரும் நிக்கும் போது நீ மட்டும் ஏன் உக்காந்திருக்கே? - என்பார்.அய்யோ .. நான் நிக்கிறேன் ... என்று குதித்து காண்பிப்பார்.

கம்பர் பாக்கும் போதும், அகத்தியர் உக்காந்த மாதிரி தெரியுது. பக்கத்திலெ வந்து பாக்கும் போது தான் தெரியுது… அவர் உக்காரலெ.. நிக்கிறாரு. சரி அடுத்து பாத்தா பக்கத்திலெ இராமன் நிக்கிறாரு.. என்ன தான் முனியா இருந்தாலும், ஹீரோ ராமன் தானே!!

ஹீரோவை தூக்கி வைக்கனும். அதே சமயம் அகத்திய முனிக்கு கோவமும் வந்துறக்கூடாது..

இருகோடுகள் படம் பாத்தவங்க.. கொஞ்சம் யோசிங்க… ஒரு கோடை சின்னதாக்க… பக்கத்திலெ.. ஓரு பெரிய கோடு போடணும்.. அம்புட்டுத்தான்.

கம்பரும் அதே தான் செய்கிறார். இராமனைப் பாத்து "நிமிந்தாளு" - நெடியோன்னு சொல்லிவிட்டார். அதாவது அமிதாப்பை லம்பு என்று சொல்வது போல்..சொல்லி.. நிக்கிற ஆளு தான் அகத்தியர் என்றும் கிண்டல் செய்து.. நமக்கென்ன வம்புன்னு ஓடிப் போயிட்டாரு பாருங்க..

கம்பர் ரகசியமா கொடுத்த பாட்டு இது தான்:

நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றும் உள தென் தமிழ் இயம்பி இசைகொண்டான்.

[நின்ற அகத்தியனை இராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் எழுதிய அகத்தியன் ராமனைத் தழுவி வருக..வருக.. வரவு நல்வரவாகுக என்றான்]

அதாவது நிமிந்தாளை அகத்தியர் கட்டி தழுவிய கதை தான் இது.

கிண்டல் தொடருதோ இல்லையோ..

கம்பன் தொடர்கள் தொடரும்..

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

அடைந்தால் மஹாதேவன், இல்லையேல் மரணதேவன்

தமிழ் சினிமாவிலெ வரும் சில பாட்டுக்கள் பாத்தா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ – ன்னு தான் யோசிக்கத் தோணுது..

சாதாரணமா இருக்கிறதை ஏதோ காதலிக்காக ஆகுற மாதிரி சொல்றது பழைய சரக்கு தான்.. பழைய செய்யுள் சொன்னா ஒரு மண்ணும் புரியலைன்னு கமெண்ட் வரும். ஆனா சினிமா பாட்டு புரியும். தெளிவுரை பொழிப்புரை தேவையில்லை.. (தேவை இல்லைன்னு சொல்லியே இம்புட்டு வியாக்யானம் எழுதுறெ??).. சரி விஷயத்துக்கு வர்ரேன்.

அச்சமில்லை அச்சமில்லைன்னு ஒரு படம். சரிதா நெல்லைத் தமிழ் பேசி கலக்கிய படம். தமிழ் படத்திற்கே Sub Tittle தேவைப்படும் அளவுக்கு நெடுநெல்லைத்தமிழ். (நான் நெல்லை நண்பர் ஒருவரை பக்கத்தில் வைத்து தான் ஓரளவு புரிந்து கொண்டேன்) அதில் ஒரு பாட்டு வரும். கதாநாயகியப் பாத்து வெக்கப்பட்டு செவ்வெந்திப் பூ சிவப்பாச்சி..

பாடல் பதிவின் போது அதனை செவ்வெந்திப் பூவும் சிவப்பாச்சி.. என்று மேலும் மெருகு ஏத்துனாங்களாம்.

வைரமுத்து வரவுக்குப் பிறகு வார்த்தை ஜாலங்கள் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. மனுஷனுக்கு வேத்துக் கொட்டினா, தண்ணியால கழுவலாம். தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே.. இது வைர வரிகள்… சாத்தியமா இதெல்லாம்…மூச் .. கேக்கவே கூடாது.

பயணங்கள் முடிவதில்லை. இதில் ஒரு பாட்டு

கடற்கரை ஈரத்திலே

காலடிகள் நீ பதிக்க

அலை வந்து அடித்ததினால்

கன்னி மனம் தான் துடிக்க

கடலுக்குக் கூட ஈரமில்லையோ??

அந்தமான்ல எங்கே பாத்தாலும் தண்ணி தான்..(நீங்க நெனைக்கிற அந்த தண்ணியும் தான்)..கடல் முழுக்க தண்ணி.. இருந்தாலும் ஈரம் இல்லையான்னு கேக்கிறார் கவிஞர்.

எல்லாம் ஒரே காதல் கிறுக்கர்களாக இருப்பாகளோ??

இதெல்லாம் தூக்கி சாப்பிட்ற மாதிரி வந்திருக்கும் சமீபத்திய கற்பனை. ஆத்தி..ஆத்தி..ஆத்தி. அதில் வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா? என்று கவிஞர் கேக்கிறார். வெள்ளாவியில வச்சி வெளுத்தா இன்னா ஆகும்?? சரி.. நமக்கு எதுக்கு அந்த வம்பு??

அது சரி … தலைப்பு ஏதோ.. அடைந்தால் மஹாதேவியை உல்டா பன்னி எழுதின மாதிரி இருக்கு. அதைப் பத்தி மூச்சே விடலை.

ஓகே..ஓகே.. வந்துட்டேடேடேன்ன்ன்ன்ன்ன்…

இதெல்லாம் டூப்பு… நான் தான் டாப்பு என்று சொல்ற மாதிரி ஒரு கவிஞர் கற்பனை ஓடுது.

ஒரு பெண் ஒரு ஆணை அசைப்படரா.. (எம்ஜிஆர் படத்து சீன் மாதிரி). உன்னை அடையனும் இல்லையேல் சாகனும். இதெல்லாம் எல்லாரும் அடிக்கிற டயலாக் தானே! இந்த நபர் கொஞ்சம் மேலே போறார். சாகிற மனுஷி எதை குடிச்சி சாவா? விஷம் தானே.. விஷம் குடிச்சி சாகுற மாதிரி எழுதிட்டா சாதாரண கவிஞர். கவிச் சக்கரவர்த்தி எழுதினா எப்படி இருக்கும்? அமிர்தம் குடிச்சே செத்துப்போவேன் என்கிறார்.. (ஆத்தி…ஆத்தி..எம்புட்டு புளுகு..)

அமிரதம் சாப்பிட்டா சாவே கிடையாது..அதை குடிச்சுட்டு சாவேன்னு சொல்ற அந்த கிறுக்கி யாருன்னு நீங்க தெரிஞ்ச்சிக்க வேணாமா??

சூர்ப்பனகை.

ஹீரோ???????

ராமன் தான்

ராமனைப் பாத்து கிறங்கும் இடத்தில் கம்பர் போட்ட பிட்டு இது..

ராமனோட அகன்ற மார்பைப் பாத்தாளாம் சூர்ப்பனகை. அப்படியே தழுவனும் இல்லாட்டி அமுதம் சாப்பிட்டாவது சாவனும் ன்னு அந்த சிச்சுவேஷனை எழுதுறார் நம்ம கம்பர்

பாட்டு இதோ:

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்

ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்

பொன்றுவென் போக்குஇனி அரிது போன்ம் எனா

சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்.

அடுத்து வேற ஏதாவது கலாய்க்கலாம்..

சீதை எத்தனை சீதையடா

ராமன் எத்தனை ராமனடி என்று தான் எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க.. அது ஒரு சூப்பர் படம்… சிவாஜி காக்கா வலிப்பு வந்த மாதிரி ஆரம்பிச்சி அப்புறம் நடிகனாகி பெரிய ஹீரோ ஆகி கலக்கும் படம் அது. தமிழக மக்களுக்கே ஆளுயர மாலையை அறிமுகம் செய்தது அந்தப் படம் தான்.

ராமன்…எத்தனை ராமனடி என்று ஒரு பாட்டும் உண்டு. ஆனா அது அந்த ராமன் எத்தனை ராமனடி படத்தில் கிடையாது. அது லட்சுமி கல்யாணம் படத்தில் வரும் பாட்டு. அந்தப் பாட்டில் சிவராமன் ரகுராமன் என்று ஊரில் இருக்கும் எல்லா ராமன் பத்தியும் வரும். ஆனா சாப்பாட்டு ராமன் பத்தி மட்டும் வராது. சாப்பாட்டு ராமன் கேரக்டெரும் ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி தூள் கிளப்பி இருப்பார்.

ஹீரோ டாமினேட்டட் உலகில் ஹீரோயின்களுக்கு அவ்வளவு மரியாதை இல்லை தான். என்னைக்காவது அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு என்று பட டைட்டில் வைப்பதோடு சரி..

மூன்றாம் பிறை… ஒரு அருமையான படம். படம் ஆரம்பித்த இடத்திலிருந்து கடைசி வரை நடிப்பில் சூரப்புலியாய் மின்னுபவர் ஸ்ரீதேவி. ஆனால் படம் முடியும் போது ஒரு சின்ன அலுமினிய சட்டியை வைத்து ஆட்ரா ராமா… ஆட்ரா ராமா.. (அட ராமா… அங்கேயும் ராமா தானா??) சொல்லி ரெண்டு மூனு பல்டி அடிச்சி, ஜனாதிபதி அவார்ட் வரை வாங்கிட்டார் பரமக்குடியார். (பரமக்குடியா கொக்கா..??)

நாம எப்பவுமே ஹீரோ பக்கம் தானா??

கம்பர் கிட்டே கேட்டேன்..

நான் அப்படி இல்லை – என்றார்.

ஆதாரம் தேடினேன்.. கிடைத்தது.

அமைச்சர்களை மாண்புமிகு என்று சொல்வதைப் போல்… நாம வொர்க் பண்ற ஆபீஸின் பாஸைப் பத்தி சொல்லும் போது Manager Sir, Director Saheb என்று தான் சொல்வோம். அடுத்த துறை ஆட்களை அவன் இவன் என்போம்..(அது வேறு கதை).

சீதை பற்றி எப்போது எழுதும் போதும் ஏதாவது ஒரு மாண்புமிகு வைத்து தான் கம்பர் எழுதி இருக்கிறார். தசரதன், கைகேயி, ராமன், கூனி, பரதன், லட்சுமணன், ராவணன் இப்படி எல்லாரையும் பலதடவை மொட்டையாய் சொன்ன கம்பர் சீதையை ஒரு படி தலையில் வைத்து தான் ஆடியிருக்கார்..

பாட்டு சொல்ல ஆரம்பித்தால், என் போஸ்ட் சைசில் 100 கள் எழுதலாம்.. சும்மா சாம்பிளுக்கு கொஞ்சம் பாக்கலாமே..

1. எழுதிய சித்திரம் போன்ற (சீதை)..:

எழுது பாவை அனையாள்

2. குரா மரத்தின் அரும்பும் கொங்கு மரத்தின் குவிந்த அரும்பும் கூந்தலில் மலரப் பெற்ற பூங்கொம்பு போன்ற சீதை:

குரவம் குவி கோங்க்கு அலர் கொம்பினொடும்

3. பெண் மானைப் போன்ற சீதை

மானே அனையாளொடு

4. பெண் மானின் கண் அழகைப் பெற்ற சீதை

நவ்வியின் விழியவளோடு

5. பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய சீதை

இந்து நன்னுதல்

இப்படி சொல்லுதற்கு பதிலாய்… சீதை எத்தனை சீதையடா என்கிறேன் நான்.

நீங்க என்ன சொல்றீங்க??

கபடி கபடி கரடி...கரடி...

இந்தக் கரடி, உலகத்திலே என்ன தப்பு செஞ்சதோ தெரியலை.. அதுக்கு எங்குமே ஒரு நல்ல பேரு இல்லெ..

கரடியா நான் கத்துறேன் யாருமே கேக்கலைன்னு கத்தும் ஆசாமிகளை பாத்திருப்பீங்க.. (கரடி மாதிரி கத்துனா யாரால தான் காது கொடுத்து கேக்க முடியும்??)

ஒரு படத்தில் கூட செண்ட் அடிச்ச பிறகு வடிவேலுவை, ஒரு கரடி நைஸா தள்ளிட்டு போகும்.. அப்புறம் என்ன ஆச்சிங்கிறதை சென்ஸார் புண்ணியத்தால் யாருக்கும் தெரியாமல் செய்து விட்டார்கள்…

ஒரு பழைய படத்தில் கூட கரடியை வச்சி காமெடி இருக்கு. ஏ கருணாநிதியோ அல்லது சந்திரபாபுவோ மரத்தை சுத்தி கரடியை வைத்து வரும் காமெடி ஸீன் அது.

பூஜை வேளையில் கரடி என்பது அடிக்கடி புழங்கும் வாக்கியம்.. ஆமா.. பூஜைக்கும் கரடிக்கும் அப்படி என்ன அவ்வளவு ஏழாம் பொருத்தம்?

எனக்குத் தெரிந்து கரடிக்கு பயந்து ஒருவன் மரத்தில் ஏறிவிட… கரடி கீழே வெயிட்டிங்க்.. மரத்தில் உள்ளவனுக்கு தூக்கம் வராமல் இருக்க… இலையை ஒவ்வொன்றாக பிடுங்கி.. கீழே போட… மரத்தின் கீழ் சிவன் இருக்க… அந்த மரம் வில்வ மரமாக போக… அன்றைய இரவு சிவராத்திரியாக இருக்க… அவன் கரடியிடம் தப்பி, சொர்க்கமே போனானாம். இப்படித்தான் போகுது கதை..

ஆனா.. கரடிக்கு நடைமுறை வாழ்வில் நல்லபேர் இல்லையே..!!!

இன்னும் சில இசகு பிசகான உதாரணங்கள் பாக்கலாமா??

ஆமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி (நான் வம்பாய் கம்பரை இழுப்பது போல்… இவ்வளவும் அதுக்குத்தானே!!!)

கொல்லன் தெருவில் ஊசி வித்த கதையா…

சம்மன் இல்லாம ஆஜர் ஆன மாதிரி…

இப்படி சொல்லிட்டே போகலாம்..(இதுக்கு மேலே தெரியாட்டி, இப்படியும் சொல்லி சமாளிக்கலாம்!!)

ஆனா எல்லாருக்கும் இப்படி ஒரு எசகுபிசகான சூழல் கண்டிப்பா வாச்சிருக்கும். நான் இப்பொ சொல்லப்போறது ஒண்ணு இல்லெ..ரெண்டு இல்லெ.. மூனு.

அப்பா… இப்பவே கண்ணெக் கட்டுதே??? (வடிவேலு ஸ்டைலில் படிங்களேன்)

சூழல் ஒண்ணு:

பலான பார்ட்டிகளுக்கு கவனம் எதில் இருக்கும்? பணத்தில் தானே?.. ஆனா சோத்துக்கே லாட்டரி அடிக்கிற ஒருத்தன் அங்கே போனா…எப்படி இருக்கும்??

இரண்டாம் காட்சி:

அவங்க வீட்டுக்கு போனா… சூப்பரா காஃப்பி… அப்புறம் அருமையான அடை வடை பாயாசம் இதெல்லாம் கெடைக்கும்னு நெனச்சிட்டு ஒரு வீட்டுக்கு போனா… அங்கே … ஹி..ஹி… வீட்ல ஊருக்கு போயிட்டாங்க… நான் தான் சமையல்… அப்பொ எப்படி இருக்கும் உங்களுக்கு?? கடுப்பு வராது..??

மூன்றாம் ஸீன்:

கருணையே வடிவா ஒரு முனிவர். அவரை எப்படியாவது கல்யாணம் கட்டிக்கணும்னு ஒரு சூப்பர் பிஃகர் நெனைச்சா… அது எசகு பிசகா இருக்காது??

அது சரி… இந்த கதை இப்பொ எதுக்கு…

வேறெ எதுக்கு??

கம்ப ராமாயணம் சொல்லத்தான்..

ராவணன் விட்ட திரிசூலம் ஜடாயு மேலே பட்டு.. கீழே விழுந்திடுச்சாம்.. அது இப்படி மூனு விதமான எசகு பிசகான காரியம் போல இருந்திச்சாம். இது கம்பன் சொல்லும் கற்பனை..

பாட்டு:

வேணும்கிறவங்க படிக்க மட்டும்:

பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புங்கணோரும்

இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்

தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த

மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அவ்வேள்.

அப்புறம் வேறு ஏதாவது கலாட்டா மாட்டுதான்னு பாக்கலாம்.. சரி… எழுத நான் ரெடி.. படிக்க நீங்க ரெடியா??

எப்படி இருந்த நான்...

நொந்து நூலானவர்கள் பொதுவாக எல்லாருக்கும் புரியும் படி சொல்லும் ஒரு டயலாக் எப்படி இருந்த நான்…இப்படி ஆயிட்டேன் என்பது தான். அதனை எய்ட்ஸ் விளம்பரத்திற்கென விவேக்கை வைத்து ஒரு படத்தில் செய்ய வைக்க, அது ஓஹோன்னு ஹிட் ஆகிவிட்டது… மக்கள் மனதில் எய்ட்ஸ் ஞாபகம் இருக்கோ இல்லையோ, அந்த விவேக் டயலாக் இப்பவும் மக்கள் மத்தியில் பளிச் தான்…

ஆமா.. நீங்க ரியல் லைஃபில் இப்படி டயலாக் அடிக்கும் ஆசாமியை பாத்ததுண்டா?? என்னெயெக் கேக்கிறீங்களா??... அதுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் போகனும். ஓகேவா??

கொஞ்ச நாள் முன்னாடி என் மொபைலில் இருக்கிற எல்லா போட்டோவையும் சகட்டு மேனிக்கு என் பையன் பாத்துகிட்டே இருந்தான். (என்ன…ப்ளாக் எழுதுறான்?? ஒரு மெஸேஜ் ஏதாவது இருக்கா அதுலெ? என்று கேட்கும் பொறுப்பான பார்ட்டிகளுக்கு, இதோ ஒரு மெஸேஜ்: உங்க மொபைல்லே வில்லங்கமான போட்டோக்கள் இருந்தால், உடனே அதை அழித்து விடவும். இந்த காலத்து பசங்களுக்கு அடுத்தவர் போன் நோண்டுவது தான் வேளை.. ஹி..ஹி..நானும் சான்ஸ் கெடைக்கும் போது அந்த நல்ல காரியம் பன்னியிருக்கேன்.)

என் பையன் கண்ணுக்கு சிக்கிய போட்டோ ஒண்ணு… வேகமாக வரும் ஆட்டோ. ஆட்டோ டிரைவர் உள்பட யாருமே அந்த போட்டோவிலெ காணாம். இதெ ஏம்ப்பா எடுத்து வச்சிருக்கே? ன்னு கேட்டான்.

பரமக்குடியில் நம்ம வீட்டு பக்கத்து தெருமுனையில் ஒரு அம்மா பணியாரம் (ரம்பா விரும்பிச் சாப்பிடுவாங்களே..அது தான்) சுட்டு விக்கிறாங்க.. அவங்களுக்கு ஒரு காலத்தில் 23க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாம். (20 கோடி இருக்கும் இன்றைய மதிப்பு) ஆனா இன்னெக்கி இப்படி ஆய்ட்டாங்க…

சரி அவங்களை ஒரு போட்டோ எடுத்து வச்சிக்கலாம்னு எடுத்தேன். அதுக்குள்ளாற நடுவில ஒரு ஆட்டோ வந்திடுச்சி..அதான் அந்த ஆட்டோ போட்டோ.. அவங்க துரதிர்ஷ்டம் போட்டோ கூட எடுக்க முடியலை. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு அவங்க புலம்பலாம்.

என் பையன் கேட்டான்… சரி..அந்த ஆட்டோ போன பின்னாடி இன்னொரு கிளிக் பன்னியிருக்க வேண்டியது தானே?? (நல்ல கேள்வி.. எப்படி சமாளிச்சே???) போட்டோ மட்டும் இருந்தா வெறும் தகவல். (RAW Data).. ஆட்டோ படம் இருந்தா சுவாரஸ்யமான விஷயம். (எனக்கு ஓகே..உங்களுக்கு எப்படி இருக்கு??)..இப்படி சொல்லி சமாளிச்சேன்.

பொதுவான் விதி என்பது, ரொம்ப நல்லா இருந்து நொடிஞ்சு போன சொல்லும் வாக்கிடம் எ இ நா இ ஆ என்பது. சில சமயங்களில் அப்படி ஒண்ணுமே இருக்காது.. ஆனா நெனைச்சே அப்படி பீஃல் பன்னிட்டு இருப்பாங்க..

உதாரணமா.. ஒரு ஆளுக்கு ஆபீசில் ஒரு மெமொ கெடைக்கட்டும் அல்லது தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆகட்டும்.. பொலம்பல் ஆரம்பம் ஆயிடும். மொதலாளி திட்டினாலும் அந்த சீன் ஸ்டார்ட் ஆகும். பரீட்சையில் பெயில் ஆகும் பார்ட்டிகள், எதிர்பாத்த மார்க் கெடைக்காத போது…இப்படி ஏதும் விதி விலக்கு அல்ல.

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் கம்பனை இழுக்காட்டி ..நல்லாவா இருக்கு? எப்பொவுவே கம்பர் டிராக்கே தனி தான். எல்லாரும் நல்லா இருந்து கெட்டுப் போன போது தானே புலம்புறாங்க..?? ஆனா கம்பன் வார்த்தையில் எப்படி இருந்த ஆளு என்பதிலும் கூடுதல் ஆகுதாம்…அப்புறம் நொந்தும் போகிறாராம்.

சிச்சுவேஷன் சொன்னா இன்னும் புரியும். ராவணன் சீதையை ஜொள்ளு விட்டு பாக்கும் காட்சி.. (நம்ம ஆட்கள் தமண்ணாவை ஜொள்ளுவிட்டு பாக்கிற மாதிரி). அந்த அழகில் மயங்கி ஒடம்பு கொஞ்சம் ஊதுதாம்.. அப்புறம் கிடைப்பாளா மாட்டாளா என்ற சந்தேகத்தில் ஒடம்பு இளைச்சிட்டானாம்..

வீங்கின மெலிந்தன வீரத் தோல்களே.. இது கம்பர் வாக்கியம்.

ஒரு காலத்தில் பத்து தலை இருக்கிற ஆசாமி இருப்பானான்னு கிண்டல் அடிச்ச நானு இப்பொ ராமாயணத்தெ விழுந்து விழுந்து படிக்கிறேன்..

ம்… எப்படி இருந்த ஆளு… இப்படி ஆயிட்டேன்..